சிறிலங்காப் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் விலை - எம்மக்களின் வாழ்விற்கு அது உலை!

உலக அரசுகளின் மௌனப் புன்னகையின் கீழ் தமிழின அழிப்பின் உச்சக்கட்ட நடவடிக்கைகள் எமது தாயகப் பகுதியில் நடந்தேறிவருகின்றன. ஆயுத உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வெளியுலகம் முழு மூச்சுடன் இலங்கை அரசிற்கு வழங்கிவருகின்றது. இவ்வேளையில், நாம் எம்மை அறியாமலேயே சிங்கள அரசின் பொருளாதார வளத்திற்குப் பலம் சேர்ப்பவர்களாகப் புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றோம். புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் செய்யவேண்டியது யாதெனில், எந்தெந்த வகையில் இலங்கை அரசு வருவாயை ஈட்டுகின்றது என்பதைக் கண்டறிந்து, அவ் வழிகளை உடனடியாக மூடவேண்டியதேயாகும்.

முதலில் நாம் அன்றாட மற்றும் ஆடம்பரத் தேவைகளுக்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்போம். அதாவது, உணவு வகைகள் மற்றும் உணவு தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் போன்றவற்றை வாங்குவதை நிறுத்துவோம். ஏனெனில், நுகர்வோன் எதை விரும்புகிறானோ அதையே சில்லறை வியாபாரிகள் கொள்வனவு செய்வார்கள் சில்லறை வியாபாரிகள் எதை விரும்புகிறார்களோ அதையே மொத்த வியாபாரிகள் கொள்வனவு செய்வார்கள். மொத்த வியாபாரியின் தேவைகளே உற்பத்தியாளனை ஊக்குவிக்கின்றது. உற்பத்தி அதிகரித்தால் நாட்டின் வரி வருவாய் அதிகரிக்கும். உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, நாட்டின் அந்நியச்செலாவணி அதிகரிக்கும். அந்த அந்நியச்செலாவணியைப் பயன்படுத்தி, வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்து, அந்த ஆயுதங்களால் எம்மினத்தை அழித்து வருகிறது இலங்கை அரசு. ஆக மொத்தத்தில், நாம் கொள்வனவு செய்யும் இலங்கையின் உற்பத்திப் பொருட்களே ஆயுதங்களாக மாறி எம்மக்களின் அழிவுக்கு வழிகோலுகிறது. ஆகவே, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களனைவரும் இலங்கை உற்பத்திகளைப் புறக்கணிப்போம். அப்பொருட்களைக் கொள்வனவு செய்யும் வேற்றின மக்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் புறக்கணிக்கச் செய்வோம்.

பொருளாதார நெருக்கடியை இலங்கை அரசிற்கு வழங்குவதன் மூலம், அது முன்னெடுத்து வரும் இன அழிப்புப் போரை நிறுத்த முடியும் அல்லது தளர்த்தவாவது முடியும். எந்நேரமும் இலங்கை அரசிற்கு உதவிவரும் உலகநாடுகளும் பணவீக்கம், வேலையில்லாப் பிரச்சினை, பாரிய உற்பத்தி நிறுவனங்கள் மூடப்படுதல் முதலிய பிரச்சினைகளினால் நெருக்கடியிலிருக்கும் இவ்வேளையில், போருக்கான உதவிகளை அவர்களும் செய்ய முன்வர மாட்டார்கள். ஏற்கனவே இலங்கையில், மின்சாரசபை மற்றும் கடதாசித் தொழிற்சாலை போன்றவற்றில் பணிபுரிவோருக்கான ஊதியம் இரண்டு மாதங்களாக வழங்கப்படாத நிலையில், ஊழியர்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். ஆகவே, ஏற்கனவே சிக்கலில் இருக்கும் இலங்கையின் பொருளாதார நிலையை, அதன் உற்பத்திப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் மேலும் சிக்கலில் ஆழ்த்த முடியும். இதனால், சிங்கள மக்களின் கவனம் போரிலிருந்து விடுபட்டு சீரழிந்து வரும் பொருளாதார நிலையை நோக்கித் திரும்பும். இலங்கை அரசிற்கு எதிராக சிங்கள மக்களும் திரும்பும் போது வேறு வழியின்றிப் போரை நிற்றுத்தவேண்டிய நிலைப்பாடு ஒன்று இலங்கைக்கு உருவாகும். அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு கூட, பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கு நெடுநாளாகும். அந்த இடைவெளியில் சாவின் பிடியிலிருக்கும் எங்கள் மக்களை மீட்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

லக சந்தையில் இலங்கைக்கு அந்நியச்செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் முக்கிய பணப்பயிராக விளங்குவது தேயிலை. பிரித்தானியரால் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள், வனாந்தரமாகக் கிடந்த மலையகப் பகுதியைத் தமது கடின உழைப்பினால் பெரும் செல்வமீட்டும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றியமைத்தனர். கடுங்குளிராலும், வன விலங்குகளாலும், வசதிக் குறைவினாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பல இலட்சங்களைத் தாண்டும். அப்படிப்பட்ட எம் தமிழுறவுகளை இலங்கை சுதந்திரமடைந்ததும், இலங்கை அரசானது அவர்களின் குடியுரிமையைப் பறித்து, நாடற்றவர்களாக்கியது. பல தலைமுறைகளாக அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்பின் பயனாக உருவான தேயிலைத் தோட்டங்களில் விளைந்த தேயிலையை ஏற்றுமதி செய்து, அதனால் கிடைக்கும் பணவருவாயில், ஆயுதம் கொள்வனவு செய்து, எம் தமிழினத்தின் உயிரைக் குடிக்கிறது இலங்கை அரசு. செந்நிறத் தேநீரை உலகுக்கு வழங்கி, அந்த வருவாயில் தமிழரின் செங்குருதியைக் குடித்து மகிழ்கிறது சிங்கள அரசு. புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம், இதனைப் பல்லின மக்களுக்கும் எடுத்துக் கூறவேண்டும். இலங்கையை உலக சந்தையில் வீழ்ச்சி காணும்படி செய்ய வேண்டும். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் பலம் என்ன என்பதை இலங்கை அரசுக்கு நிரூபிக்க வேண்டும்.

அந்நியச்செலாவணியை இலங்கைக்கு சம்பாதித்துக் கொடுக்கும் வியாபாரங்களில் அடுத்து முக்கியத்துவம் பெறுவது, இறக்கி ஏற்றல் வியாபாரம். அதாவது, மூலப்பொருட்களைப்
பிறநாடுகளிலிருந்து தருவித்து, முடிவுப் பொருட்களாக மாற்றுதல் அல்லது பைகளில் அடைத்துப் பெயரிடுதல் போன்றவற்றைச் செய்தபின், ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்.

அடுத்து முக்கியத்துவம் பெறுவது, தைத்த ஆடைகள் ஏற்றுமதி. தைத்த ஆடைகள் வியாபாரத்தில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையையே கேந்திர நிலையமாகக் கொண்டு இயங்குகின்றன. ஐக்கிய இராச்சியத்தில், மார்க்ஸ் அன் ஸ்பென்சர் (M&S) இலங்கையிலிருந்து தைத்த ஆடைகளைப் பெருமளவில் கொள்வனவு செய்கிறது. புலம்பெயர்ந்து வாழும் எம்மவர் மத்தியில், இலங்கையின் யானை மார்க் குளிர்பானங்கள், நெஸ்லே மற்றும் மலிபன் தயாரிப்புக்கள் மிகவும் பிரசித்தம் பெற்றுக்
காணப்படுகின்றன. அவற்றைக் கொள்வனவு செய்யாது தவிர்க்க வேண்டும்.

இலங்கையின் பாதுகாப்பற்ற சூழலை மேற்கோள் காட்டி, அங்கு செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளை ஊக்கமிழக்கச் செய்தல், இலங்கையின் விமான சேவையைப் பயன்படுத்தாது தவிர்த்தல், இலங்கை வியாபார நிறுவனங்களின் பங்குகளை வாங்காது தவிர்த்தல், ஏற்கனவே பங்குதாரர்களாக இருப்பின், அப்பங்குகளை விற்றல் மற்றும் இலங்கையின் வங்கிகளில் எமது பெயர்களிலுள்ள சேமிப்பு வைப்புக்கள் முதலிய அனைத்து வங்கிக் கணக்குகளையும் மூடுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம், இலங்கை அரசிற்கு இலாபம் கிடைக்கின்ற பெரும்பாலான
வழிகளை மூட முடியும். இதை ஒவ்வொரு புலம்பெயர்ந்து வாழும் தமிழனும் மேற்கொள்வதுடன், தம்மைச் சுற்றியுள்ளவர்களிடையேயும், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்வோமேயானால், அதனால் கிடைக்கக்கூடிய பலனும், தமிழர் தம் பலமும் வருகின்ற நாட்களில் வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கும். ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்பணி வேகமாக முடுக்கிவிடப்பட்டு, வெற்றிகரமாக இலக்கை அடைவதற்கு அனைத்துத் தமிழுறவுகளும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டுமென
உரிமையோடும் அன்போடும் கேட்டுக் கொள்கிறார்கள் தமிழ் இளையோர்கள்.

இவை தொடர்பான மென்புத்தக வடிவிலான அறிவித்தல் தரவிறக்குங்கள்.


தமிழ் இளையோர்கள்
மேலதிக செய்திகளுக்கு :
Boycott Sri Lanka

சிறிலங்காப் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் விலை - எம்மக்களின் வாழ்விற்கு அது உலை!SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்