இடைத்தங்கல் முகாமில் பாலியல் கொடுமைகள் : வெளிக்கொணருகிறது மற்றுமொரு சர்வதேச ஊடகமான Sky News


பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்கு வந்த தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் நடைபெறும் கொடுமைகள் பற்றி மற்றுமொரு சர்வதேச ஊடகம் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. பிரித்தானியாவின் Chanel4 தொலைக்காட்சிச் சேவை முதல் தடவையாக இடைத்தங்கல் முகாம்களில் வதியும் மக்களின் துயரங்களைப் பதிவு செய்தது.அதைத் தொடர்ந்து அந்தச் செய்திச் சேவையின் செய்தியாளர்கள் சிறிலங்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டார்கள்.

தற்போது மற்றுமொரு பிரபல சர்வதேசம் ஊடகமாகிய SkyNews இடைத்தங்கல் முகாம் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.ஸ்கை நியூஸ் செய்தி சேவையின் ஆசிய பிராந்தியத்துக்கான நிருபர் அலெக்ஸ் க்ரௌவ்போர்ட் (Alex Crawford) தனது ஆய்வறிக்கையில் மோதல்களினால் இடம்பெயர்ந்து வந்து, இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களில், பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் இளைஞர்கள் தனியாக கொண்டு செல்லப்படுதல் என்பவை நடைபெறுவதாக அவை குறித்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

தமது வீடுகளை இழந்து சுமார் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான மக்கள் 40 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கட்டுள்ள போதும், அவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தனித்தனியாக பிரிக்கப்படுகின்றனர். என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இம்மக்களுடன் விடுதலை புலிகளின் போராளிகள் கலந்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுவதாகவும் தெரிவித்த அவர், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணியை பேட்டி எடுத்த போது,

பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதும், இளைஞர்கள் காணாமற் போவதும் நடைபெறுவதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.பாதிப்புக்குள்ளானவர்களுக்கு என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பாக எமக்கு தெரிவதில்லை. காரணம் அவர்களை பற்றி தகவல்கள் எதுவும் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களில் ஒன்றான 'ஒக்ஸ்பாம்' (Oxfam) இன் தலைமை அதிகாரியான டேவிட் தெரிவிக்கையில் எம்மால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிப்பொருட்கள் வழங்குவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விடுதலை புலிகளின் ஆதரவாளர்களாக இருப்பவர்களுக்கு NGO தொண்டு நிறுவன ஊழியர்கள் கரிசனை காட்டுவதாக எம்மீது மறைமுகமாக குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

இடைத்தங்கல் முகாம்களில் சிறுவர் துஷ்பிரயோகம் நடைபெறுவது தொடர்பாக, அலெக்ஸ், அரசாங்க பத்திரிகையாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பிய போது, இடைத்தங்கல் முகாம்களில் (Blue - eyed) சிறுவர்கள் இருப்பதாகவும், தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு, இது மகிழ்ச்சிகரமானதாக இருக்கலாம், அப்படியாயின் இம்முகாம்களில் நடைபெறும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பு அவர்களே எனவும் அரசாங்க தரப்பால் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது

இடைத்தங்கல் முகாமில் பாலியல் கொடுமைகள் : வெளிக்கொணருகிறது மற்றுமொரு சர்வதேச ஊடகமான Sky NewsSocialTwist Tell-a-Friend

'மக்கள் பாதுகாப்பு வலயம்' கொலைக்களமாக எரிந்து கொண்டிருக்கிறது: அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன்

'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பகுதியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அப்பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பரப்புரைப் பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார்.வன்னியில் உள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இது தங்களது கடைசி வேண்டுகோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை மிகச்செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் 'மக்கள் பாதுகாப்பு வலய'ப் பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கிறது.

உயிரிழந்த மக்களின் உடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை. மருத்துவமனைகள் அற்ற நிலையிலும் மருத்துவ வசதிகள் அற்ற நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர். ஆனால் எந்த வசதியும் அற்ற நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.

இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இங்குள்ள ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேரை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.

செய்திகள்: புதினம்

'மக்கள் பாதுகாப்பு வலயம்' கொலைக்களமாக எரிந்து கொண்டிருக்கிறது: அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன்SocialTwist Tell-a-Friend

ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நோக்கி சிறிலங்கா படையினா நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட கோரத் தாக்குதலில் 1,112-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சகலவிதமான நாசகார ஆயுதங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருவதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இத்தாக்குதலினால் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் தூங்கிக்கொண்டிருந்த பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்தும் உள்ளனர்.பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுகின்றன. காயமடைந்தவர்களில் பலர் காயங்களுடன் தரையில் கிடந்தவாறு தங்களைக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்புவதாகவும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அத்துடன் வீதி, வீதியாக மக்களின் உடலங்கள் காணப்படுவதாகவும் மீட்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் தொடர்ச்சியாகவும் தீவிரவமாகவும் இருக்கின்றது எனவும் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்கு பணியாளர்கள் எவரும் இல்லை என்றும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.இதுவரையில் 1,112 பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் இருப்பதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா தெரிக்கின்றார்.

மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடலங்களில் 67 பேர் சிறுவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளையில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

செய்திகள் : புதினம்

ஒரே இரவில் 1,000-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை!: பீரங்கிக் குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவின் Channel - 4 சேவையில் வவுனியா முகாம்கள் தொடர்பான செய்திகள்

பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவையில் இன்று இடம்பெற்ற செய்திக் கண்ணோட்டத்தில் வவுனியாவின் முகாம்கள் தொடர்பாகவும் அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்த செய்திகளையும் தொகுத்து வழங்கியிருந்தனர்.


வவுனியாவின் வடக்குப்பகுதியிலுள்ள இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து பிரித்தானிய Channel - 4 தொலைக் காட்சிச் சேவைக்குக் கிடைத்த செய்திகள் பிரகாரம் இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாவதக தெரியவருகிறது.அரசு சாரா ஊடகவியளார்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படாத நிலையில், ஒளிப்படக் கருவியை மறைத்துவைத்து முகாமிற்குள் நுளைந்த Channel - 4 செய்தியாளர் ஒருவர் முதல் தடவையாக சுதந்திரமாக சில செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார்.இச்செய்தி ஒளிப்பதிவானது முதல் தடவையாக சுதந்திரமாகப் பதிவுசெய்யப்பட்ட செய்தியென Channel - 4 கூறுகிறது.

நிக் பட்டனின் இச் செய்தி அறிக்கையின் படி இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவது தவிர, இறந்த உடல்கள் முகாம்களுள் வெளியான இடங்கள் நாட்கணக்கில் கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் மேலும் கூறும் சனல் 4 செய்திகள் இம்முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கிறது. தன்னை அடையாளம் காட்டவிரும்பாத உதவி அமைப்பாளர் ஒருவர், தனது முகாமில் நான்கு இறந்த உடல்கள் மூன்று நான்கு நாட்களாக கவனிப்பரற்றுக் கிடந்ததாகக் குறிப்பிடுகிறார்.

பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாத தாய்மாரைப் காண்பதாகக் கூறும் இவர், ஒரு தாய் இரண்டு கரண்டி பாலுக்காக தன்னிடம் கெஞ்சி மன்றாடியதாகவும் குறிப்பிடுகிறார்.பல குழந்தைகள் தாய் தந்தையர் இல்லாமல் தவிக்கவிடப்பட்டுள்ளதாக முகாம் வாசி ஒருவர் குறிப்பிடுகிறார். இங்கு எமக்கு வாழ்க்கையில்லை இது ஒரு சிறைச்சாலை என மேலும் குறிப்பிடுகிறார்.உணவிற்காக நெரிசலில் சிக்குண்டு இறந்து போன இரு சிறார்களைப் பார்த்ததாக மேலும் சாட்சியமளிக்கும் இவர், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த தமிழர்களை மிரட்டுவதே அரசின் நோக்கம் எனவும் குறிப்பிடுகிறார்.

ஒரு பெண் உதவிப் பணியாளர் சாட்சியமளிக்கையில் இளம் பெண்கள் இராணுவத்தால் பிரித்தெடுக்கப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறுகிறார். முகாம்களிலிருந்து தனிமைப்படுத்தப்படும் பெரும்பாலனவர்க மீண்டும் திரும்புவதில்லை எனக் குறிப்பிடுகின்றார்.பெண்கள் எல்லோர் முன்னிலையிலும் குளிக்கவேண்டிய நிலையிலிருப்பதாகவும் இது அவர்களின் மிகப் பெரும் பாதுகாப்புப் பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவிக்கும் இச்செய்தி நேற்று குளியற் பகுதியில் மூன்று பெண்களின் இறந்த உடல்கள் காணப்பட்டதாகவும் கூறுகிறது.

இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.

எழுத்துருவில் : இனியொரு...

பிரித்தானியாவின் Channel - 4 சேவையில் வவுனியா முகாம்கள் தொடர்பான செய்திகள்SocialTwist Tell-a-Friend

பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம்

சிங்கள அரச பயங்கரவாத படைகள் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட இரசாயன படைக்கருவிகளுடன் 160.000 க்கு மேற்ப்பட்ட எமது உறவுகள் மீது எந்த நேரமும் தாக்குதல் நடாத்த தாயாராகிவரும் இந்த காலப்பகுதியை பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர்.

எனவே இக்காலப்பகுதியில் சகலவிதமான களியாட்ட விழாக்களையும் முற்றாக புறக்கணித்து எமது சகல நேரங்களையும் எமது உறவுகளை காக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவோம். எமது கவனயீர்ப்பு நிகழ்வுகளின் எதிரொலியாகவே மேற்கத்தேய நாடுகள் சில சிறிலங்கா அரசின் எமது மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்க முயற்சிப்பதாக காட்ட முயல்கின்றனர்.

சிறிலங்கா இனவாத அரசானது எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாது எமது தமிழ் இனம் மீது ஒரு இனப்படுகொலையை நடாத்திக்கொண்டுள்ளது. ஆகவே எமது புலம் பெயர்மக்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்பு நிகழ்வுகளே மேற்கத்தேய நாடுகளை இதயசுத்தியுடன் இந்த நிகழ்கால உலகின் மிகப்பெரும் மனித அவலத்தை நிறுத்தமுடியும் என்ற எமது அசைக்கமுடியாத நம்பிக்கையுடனேயே இந்த அவசரகால பிரகடனத்தை நாம் செய்துள்ளோம்.

நாம் இங்கே ஒரு அமைதியான நாட்டில் எமது சகல உடல் உறுப்புகளுடனும் வாழ்கின்றோம் ஆனால் எமது உறவுகளின் நிலமை? எல்லோரும் யோசிப்போம் எமது உறவுகளை காப்பாற்ற உடனடியாக செயலாற்றுவோம். சகல களியாட்ட நிகழ்வுகளையும் பிற்போடுவோம் எமக்கு ஒரு காலம் வரும் அப்போது நாம் எல்லோரும் சேர்ந்து எமது களியாட்ட நிகழ்வுகளை கொண்டாடுவோம்.

நாம் இங்கே எந்தவகையான நிகழ்வுகள் களியாட்ட நிகழ்வு என்று கூறவில்லை காரணம் கவனயீர்ப்பு நிகழ்வு தவிர்ந்த சகல நிகழ்வுகளுமே களியாட்டங்கள் தான் உடனே தவிர்த்துகொள்ளுங்கள்.சில இனவிரோதிகள் எமது மக்களின் இன உணர்வை மழுங்கடிப்பதற்காக சில களியாட்ட நிகழ்வுகளை நடாத்த முயற்சிப்பதாகவும் நாம் அறிந்துள்ளோம்.

மக்களே!!

இனவிரோதிகளையும் எமது மக்களின் அவலங்களில் குளிர் காயமுயற்சிப்பவர்களையும் அடையாளம் கண்டு அவர்களை எமது சமூகத்தில் இருந்து புறம்தள்ளுங்கள்.!!!
விழிப்புத் தான் விடுதலையின் வேர்!
பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள்.

எனக்குறிப்பிடப்பட்டுள்ள அந்த அழைப்பில் நாளை புதன்கிழமை காலை 7மணிக்கு சீனத்துதரகம் முன்பாகஆரம்பிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எமது மக்களை சிறிலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற உடன் செயலாற்றுவோம் என மேலும் குறிப்பிட்டுள்ள ஏற்ப்பாட்டாளர்கள் எமது மக்களை காப்பாற்ற ஒன்றுகூடாமல் இருந்துவிட்டு பின் கவலைப்படுவதில் எந்தவித பயனும் இல்லை நாளைநாளை செல்வோம் என கூறாமல் உடனே முதல்நாளே சீனத்துதரகம் முன்ஒன்றுகூடுமாறு அன்பாகவும் கண்டிப்பாகவும் அழைப்புவிடுத்துள்ளனர்.

இடம்: CHINESE EMBASSY, 49-51 PORTLAND PLACE, LONDON. W 1 1JL
அன்மைய தொடருந்து நிலையம் : REGENNTS' PARK & GREAT PORTLAND STREET
காலம் : காலை 7மணி

செய்திகள் : சங்கதி

பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம்SocialTwist Tell-a-Friend

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 64 பேர் பலி; 87 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர்.மக்கள் பாதுகாப்பு வலயமான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று சனிக்கிழமை காலை 7:00 மணி தொடக்கம் 9:20 நிமிடம் வரை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக 'புதினம்' செய்தியாளர் வன்னியில் இருந்து தெரிவிக்கின்றார்.

முதலாவது எறிகணைத் தாக்குதலில் 22 பேரும் இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் அதிகமானோரும் கொல்லப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் கூறுகின்றார்.

ஆறுக்கும் அதிகமான எறிகணைகள் மருத்துவமனை மீதும் சூழவுள்ள பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்தன.இத்தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 87 பேர் காயமடைந்தனர்.கொல்லப்பட்டவர்களில் நோயாளர்கள், நோயாளர்களுக்கு உதவியாக இருந்தவர்கள், வெளியிடங்களில் இருந்து சிகிச்சை பெறவந்த வெளிநோயாளர்கள் என பலரும் அடங்குவர்.

இத்தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதனை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

செய்திகள் : புதினம்

முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 64 பேர் பலி; 87 பேர் காயம்SocialTwist Tell-a-Friend