வன்னி மக்களை பட்டினி கொல்கின்றது: 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் பலி!!

ஒருவேளை கஞ்சியோடு வாழ்வு! உலகம் கைவிட்ட வன்னி மக்களை பட்டினி கொல்கின்றது: 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் பலி!!

வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் நில ஆக்கிரமிப்புப் படையெடுப்பு காரணமாகவும், உலகத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் எதுவும் கிடைக்காத காரணத்தினாலும் ஏற்பட்டுள்ள பட்டினி அவலத்தினால் கடந்த 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் வன்னியில் உயிரிழந்துள்ளனர்.தொடர்ச்சியான உணவின்மை காரணமாகவும் நீரிழப்பு காரணமாகவும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் - நோய் எதிர்ப்புத் தன்மையை இழந்து விட்டதனாலும் - இவர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என மருத்துவ அறிக்கைகளை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார்.சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ள வெளியே செல்ல முடியாத நிலையில் வீடுகளிலும் பதுங்குழிகளிலும் கூட இவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்த 18 பேர் தொடர்பாக ஆய்வு செய்த போது நடைபெற்ற மருத்துவ விசாரணைகளில் இவர்களின் சாவுக்கு போதிய உணவின்மை, ஊட்டமின்மை மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை இழப்பு ஆகியவையே காரணம் என மருத்துவ வட்டாரங்கள் 'புதினம்' செய்தியாளரிடம் உறுதிப்படுத்தியுள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் -
கனகசபை பிரவீணன் (வயது 12)
சிவராசா கண்ணன் (வயது 38)

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலையில் -
சிவநேசன் சுலக்சன் (வயது 12)
மகேஸ்கரன் கர்ணன் (வயது 15)
கருணாகரன் பிருந்தா (வயது 17)
கந்தைஞானி மனோகரன் (வயது 32)
மாத்தளன் பகுதியில் -
சபேசன் சிந்து (வயது ஒன்றரை)
பாலச்சந்திரன் சிவரூபன் (வயது 13)
மகிந்தன் விநோதா (வயது 48)
தேவராசா கஜேந்திரன் (வயது 36)
திருச்செல்வம் சிவகணேசன் (வயது 42)

அம்பலவன்பொக்கணை, இடைக்காடு பகுதியில் -
சிவராசா சக்தி கணேசன் (வயது 03)
மலர்வேந்தன் மகிழன் (வயது 12)
யோகராசா ரவி (வயது 18)

வலைஞர்மடம் பகுதியில் -
அனித்கிப்சன் (வயது 14)
பரமநாதன் புவியரசன் (வயது 17)
சிவகடாட்சம் றமணன் (வயது 23)
சிவகடாட்சம் கார்த்திகாயினி (வயது 14)
ஆகியோரே பட்டினிக்கு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, பல நாட்கள் உணவின்மை காரணமாகவே மயக்கமடைந்த 5 தமிழர்கள் மாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதன் பொறுப்பதிகாரி 'புதின'த்திடம் தெரிவித்துள்ளார்.மேலும், உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாத இதே நிலை தொடர்ந்தால் பட்டினி மற்றும் நோய் காரணமாக இன்னும் சில வாரங்களில் இழப்புக்கள் நூற்றுக்கணக்கில் அமையக்கூடும் எனவும் மருத்துவ தரப்பினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, வாரத்துக்கு 57 சுமையூர்திகள் வரவேண்டிய சூழ்நிலையில் உலக உணவுத் திட்டத்தின் சுமையூர்திகள் எவையும் கடந்த ஒரு மாதமாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என மாவட்ட அரச அதிபரின் செயலக வட்டாரங்கள் 'புதின'த்திடம் தெரிவித்தன.

கடந்த இரண்டு நாட்களில் 5 சுமையூர்தி நிவாரணப் பொருட்கள் மட்டுமே உலக உணவுத்திட்டத்தால் செஞ்சிலுவைச் சங்க கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.இதேவேளை, மரக்கறிகள் எவையுமே வன்னியில் இல்லை. சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினால் வளம் கொழிக்கும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு வந்த காய்கறிகளை பறிக்க முடியாத நிலையும் மரக்கறி வகைகளை பயிரிட முடியாத நிலை தோன்றியிருப்பதனாலும் மரக்கறி வகைகளுக்கு பாரிய தட்டுப்பாடு வன்னியில் ஏற்பட்டுள்ளது. அத்துடன், 95 விழுக்காடு மக்கள் ஒரு நேர கஞ்சியை மாத்திரமே உண்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது.குறிப்பாக, சிறுவர்களுக்கு ஊட்ட உணவு என்பது முற்று முழுதாக இல்லாத நிலை காணப்படுவதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவித்துள்ளார்.தேநீர் குடிப்பதற்கு கூட தேயிலை சீனி எதுவும் இல்லாது அவலம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

சேய்திகள்:புதினம்

வன்னி மக்களை பட்டினி கொல்கின்றது: 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் பலி!!SocialTwist Tell-a-Friend

Post a Comment

வணக்கம்!
பின்னூட்டமிட வந்திருக்கும் உங்களுக்கு நன்றிகள் !
தயவுசெய்து அநாவசிய பின்னூட்டங்களைத்தவிர்த்து, ஆக்கபூர்வமாக கருத்துக்களை இடுங்கள்.

நன்றிகளுடன்
தமிழர் குரல் குழுவினர்